கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஸ்டீவன் ஸ்மித் - தோல்விதான் காரணமா?

Shanu
அவுஸ்திரேலியாவின் அற்புதமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்மித் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து, சர்வதேச 50 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக ஸ்டீவ் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஸ்டீவன் ஸ்மித் அறிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.’
இது ஒரு சிறந்த பயணம். இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன்’ என கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு (அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம்) அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.’
எனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் இருந்தன. இரண்டு உலகக் கிண்ணங்களை வென்றதுடன் அற்புதமான அணி வீரர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது சிறப்பம்சமாகும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மெல்பேர்னில் 2010 பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெற்ற போட்டி மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித் அறிமுகமானார்.அன்றிலிருந்து கடந்த 15 வருடங்களில் 170 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 12 சதங்கள், 35 அரைச் சதங்களுடன் 5800 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.
பகுதிநேர பந்துவீச்சாளராக 40 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 28 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்