கணேமுல்ல படுகொலையில் - மற்றுமொரு சந்தேகநபர் கைது
கணேமுல்ல படுகொலையில் - மற்றுமொரு சந்தேகநபர் கைது

Shanu
சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான ஜூலியன் மாதவன் என்ற சந்தேக நபர், கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்படி, இதுவரை இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.