ஒரு உண்மையை சொல்லுறேன்! 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர ரெடியாக இருந்தாங்க – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு
ஜெயலலிதா மறைந்த போது 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய சபாநாயகர் மேலும் கூறியதாவது…
ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். ஜெயலலிதா மறைந்த போது அதிமுக பல பிரிவுகளாகி 18 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநரிடம் புகார் கொடுத்ததால் நீக்கப்பட்டனர். அதற்கு துணையாக இருந்தவர் டிடிவி தினகரன். அவர் திகார் சிறையில் இருந்தார். காலையிலேயே அவர் சிறைக்கு சென்றிருக்கிறார். அன்று காலையிலேயே நண்பர் ஒருவர் அழைக்கிறார். மு.க ஸ்டாலினிடம் சொல்லுங்கள். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். நான் அழைத்து வந்து விடுகிறேன். அவர்கள் 40 பேரும் எங்கு செல்லுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க இருந்தாலும் அடுத்து நிலைக்கு எவ்வாறு போவது என்று தெரியாத நிலையில், டிடிவி தினகரன் சிறைக்கு சென்றிருந்த அந்த நாளில் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்க சொல்லுங்கள் என்று சொல்லி என்று என்னிடம் வந்தார்கள்.
ஆட்சியில் இன்னும் 4 ஆண்டுகள் மீதம் இருக்கிறது. வந்த உடனேயே பஞ்சாயத்து தேர்தல் வைத்தால் 2 கோடி பேருக்கு பதவி கொடுத்துவிடலாம். கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு கூட்டுறவு துறையில் பதவி கொடுத்துவிடலாம். 10 வருடம் திமுக ஆட்சி இல்லாமல் இருக்கு. நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன்.
அவரிடம் உடனடியாக உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறினேன். அவரும் மதிய உணவிற்காக வீட்டுக்கு வர சொன்னார். நான் நடந்ததை அவரிடம் கூறினேன். அதன்பிறகு இது தொடர்பில் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின் ஓரிரு நாளில் என்னிடம் சொன்னார், இந்த 40 பேரை நம்பி தான் நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா? ஒருபோதும் தேவையில்லை. நாம் மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் மட்டும் நாம் ஆட்சி செய்யலாம். இல்லையென்றால் அது தேவையில்லை என்று மு.க ஸ்டாலின் சொல்லிவிட்டார். இவ்வாறு அப்பாவு பேசினார்.