தமிழ்நாடு
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சேலத்தில் டிசம்பர் 17ஆம் திகதி திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு இளைஞர் அணியினருக்கு அழைப்பு விடுக்கும் வகையில், மாவட்டம் தோறும் சென்று வருகிறேன். தற்போதைய முதல்வர், திமுக இளைஞரணி மாநில மாநாட்டை முதன் முதலாக நெல்லையில் நடத்தினார்.
அவர் சாதாரண கிளை பதவியில் இருந்து உயர்பதவிக்கு வந்தவர். திமுகவில் அவ்வாறு வரும் தொண்டர்களுக்கு உயர் பதவி காத்திருக்கிறது. திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்கே போனாலும் என்னை பற்றி பேசுகிறார். நான் பேசாததை எல்லாம் பேசியதாக கூறுகின்றனர். வழக்கை சந்திப்பேன். கலைஞரின் பேரன் நான். மன்னிப்பு கேட்க மாட்டேன். விசில் அடித்து கலைந்து செல்கின்ற கூட்டமில்லை நீங்கள். பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வாரிசுகள். திமுக அமைச்சர்கள் மீது மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அவர்களே! நீங்கள் எவ்வளவு ரெய்டுகள் வேண்டுமானாலும் விடுங்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு ரெய்டு விடப் போவது நிச்சயம் எனத் தெரிவித்தார்.