சுமார் இரண்டு மாத இடைநிறுத்தத்திற்குப் பின், கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது.
கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்குவதை செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நிறுத்தியது.
பின்னர், அக்டோபர் மாதம், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மீண்டும் விசா வழங்கத் துவங்கியது இந்தியா.
என்றாலும், கனடாவிலிருந்து சுற்றுலாவுக்காக, பணி காரணமாக வருபவர்கள், மாணவர்கள், திரைப்படம் எடுப்பதற்காக வருபவர்கள், மிஷனெரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விசாக்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று முதல் மீண்டும் கனேடியர்களுக்கு இ விசா வழங்கத் துவங்கியுள்ளது இந்தியா. இன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மெய்நிகர் ஜி 20 உச்சி மாநாடு (virtual G20 Leaders’ Summit) நடைபெற உள்ளது. அதில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில்தான் கனேடியர்களுக்கு இந்தியா மீண்டும் இ விசா வழங்க துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.