தமிழ்நாடு
சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள JR ONE காலணி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் சிறப்புறையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது…
முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக, அவர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டது. அந்த நடவடிக்கை பிறகு அந்த துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு ‘ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம்’ என்ற இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்த துறையில் வலுப்பெற இன்னும் பல பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 கோடி செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்தி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட், சிட்கோ, மற்றும் பொது தனியார் கூட்டாண்மை மூலம் 30 முதல் 50 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா வடிவில் ஆயத்த தொழில் கூடங்களுடன் கூடிய புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமை தொகுப்புகளை அரசு உருவாக்கியுள்ளது.
இன்று துவங்கிய திட்டம் மூலம் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் மற்றும் பெண்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு உருவாகும். இன்று முதல்கட்டமாக 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் கோத்தாரி குழுமம் சார்பில் இந்த தொழிற்சாலை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம் மேலும் 2440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என விரிவாக்கம் செய்யப்பட உள்ளது
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு வர உள்ளன. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.