உலகையே உலுக்கிய கொரோனா தொற்று கிட்டதட்ட ஒழிந்து, இப்போதுதான் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நேரத்தில், சீனாவில் பரவத் தொடங்கி, மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது புதிய வகை நிமோனியா பாதிப்பு. சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங் பகுதிகளில் பாதிப்புகள் அதிகரித்து, மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள் .
குறிப்பாக, சீனாவில் தற்போது பரவி வரும் இந்த நிமோனியா காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகமாக பாதிக்கிறது. திடீர் காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு, பல்வேறு வயதுடைய குழந்தைகள், சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் தீவிர சளி ஏற்படும் நிலையில், 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மோக்கோபிளாஸ்மா என்ற பாதிப்பு உருவாகிறது.
பலருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு சில குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளே போதுமானதாக இருக்கிறது. மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் எந்த அளவுக்கு வீடுகளுக்கு திரும்புகிறார்களோ, அதைவிட அதிகளவில் மருத்துவமனைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளது.
இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சை அறைகளைத் தாண்டி, அனைத்து இடங்களுமே குழந்தைகளுக்கு சிகிச்சை தரும் இடங்களாக மாறி, கொரோனா காலத்தை நினைவுப்படுத்த தவறவில்லை. பள்ளிகள் மூடப்பட்டு, விளையாட்டு மைதானங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதால், பல குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது என மருத்துவமனையிலேயே பொழுதை கழிக்கின்றனர்.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதுதான் ஆறுதல். இருந்தாலும், புது வகை கொரோனா அல்லது கொரோனாவை போன்ற ஒரு புதிய வகை வைரஸ் பாதிப்போ என பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். ஆனால், தற்போதைய பாதிப்புக்கு அறியப்பட்ட நோய் கிருமிகளே காரணம் என சீனா தெரிவித்துள்ளது.
கொரோனாவைப் போன்று அறியப்படாத கிருமிகள் எதுவும் பரவவில்லை என்றும், இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, சார்ஸ் என ஏற்கனவே தெரிந்த வைரஸ்களே காரணம் என்றும் கூறுகிறது. சீன அரசு என்னதான் சூடம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொன்னாலும், பல நாடுகள் அதை நம்புவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், கடந்த 2019ல் கொரோனா பரவியபோதும் கிட்டதட்ட இதுபோன்ற பதிலையே சீனா சொல்லி இருந்தது. இருந்தாலும், சீனாவின் தற்போதைய அறிக்கையை நம்பலாம் என தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.