தமிழ்நாடு
தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினை மாற்றப்பட்ட நிலையில், அதன் சின்னத்தின் ஆயுர்வேதத்தின் கடவுள் என்று கூறப்படும் தன்வந்திரி படம் இடம்பெற்றது. அத்துடன், இந்தியா என்ற பெயர் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. தன்வந்திரி கடவுள் படம், பாரத் பெயர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மருத்துவ கல்வி ஆணையத்தின் தலைவர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக தலைவருமான அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ ஆணையத்தின் இலட்சினையை மாற்றியது முற்றிலும் தேவையற்ற செயலாகும் எனவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில். உயிரியலும் தொழில்நுட்பமும் தான் மருத்துவத்திற்கான அடிப்படை என்றும், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்வந்திரி என்பவரால் தான் ஆயுர்வேத மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது, அவர் தான் தேவர்களுக்கு மருத்துவம் அளித்தார் என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவை கற்பனை என்பதைக் கடந்து வேறொன்றும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது என விமர்சித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களை நியமிக்காமல் தன்வந்திரியின் உருவப்படத்தை வைத்து அவரே மானசீகமாக மாணவர்களுக்கு மருத்துவப் பாடம் நடத்துவார் என்று கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் கூறப்பட்டால், அதை மருத்துவ ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து மருத்துவ ஆணைய இலட்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும் என்று வலியுறுத்திய அன்புமணி, மருத்துவத் துறை வளர்ந்து விட்ட நிலையில், அதை மேலும் வலுப்படுத்த மருத்துவக் கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயற்சிக்கக் கூடாது.
தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலட்சினையில் தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.