ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் – எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மரியாதை…!!!
தமிழ்நாடு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
இதேபோல் அவரது உருவப்படமும் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நினைவுநாள் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். இதேபோல் டிடிவி தினகரனும், வி.கே சசிகலாவும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் அதிமுக ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக டிடிவி வெளியிட்ட ட்விட் பதிவில், “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம். என்று கூறியுள்ளார்.