ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சிப்பவரும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்சி நாவல்னி மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக அவரது ஆதரவளர்கள் தெரிவித்துள்ளனர்.
அலெக்சியைக் காண்பதற்காக அவரது சட்டத்தரணி அவர் அடைக்கப்பட்டிருந்த Melekhovo என்னுமிடத்திலுள்ள சிறைக்குச் சென்றிருந்தபோது, அலெக்சி அங்கே இல்லை என அவரிடம் சிறை அதிகாரிகள் கூறியதாக அவரது சட்டத்தரணியாகிய Kira Yarmysh தெரிவித்துள்ளார்.
அதாவது, ரஷ்ய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவதுண்டாம். அவ்வகையில், அலெக்சியும் பயங்கரமான சிறை ஒன்றிற்கு மாற்றப்படலாம் என அவரது உதவியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் திடீரென வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இப்படி கைதிகளை ரயில் மூலம் வேறு சிறைகளுக்கு மாற்றுவதற்கு பல வாரங்கள் வரை ஆகுமாம். எனவே அலெக்சி ஏதாவது ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
சிறப்பு காலனி என அழைக்கப்படும் பயங்கர சிறை ஒன்றிற்கு அலெக்சி கொண்டு செல்லப்படலாம் என்றாலும், ரஷ்யாவில் அத்தகைய சிறைகள் 30 உள்ளன. ஆகவே, அவர் எந்த சிறைக்குக் கொண்டு செல்லப்படுவார் என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில், திடீரென அலெக்சி மாயமாகியுள்ள தகவலறிந்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அவர் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், சொல்லப்போனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கவே கூடாது என்று கூறியுள்ளார் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான John Kirby.