அவங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம்? தமிழ்நாட்டு மக்களோட வரிப்பணம்ங்க – அமைச்சர் உதயநிதி ஆவேசம்…!!
தமிழ்நாடு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களை வாழ்வாதாரத்தை இழந்தனர். 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோக்கும் பணி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “புயல், வெள்ளம் தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில் புயலுக்கு முந்தைய நடவடிக்கைகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் தற்போது பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய குழுவினரே பாராட்டு தெரிவித்துள்ளனர்” என்றார்.
நிவாரண தொகையை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிமைத்தொகை போல வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தலாமே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி, “உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது முதல் மாதம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால், வங்கியில் பணம் போட்டதை ஏராளமானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விடுபட்டு விடாமல் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலே ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணம் வழங்கப்பட்டது போல இப்போது வெள்ள நிவாரணம் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, நிவாரண நிதியை கேட்டதுமே கொடுக்க, இது என்ன ஏ.டி.எம்மா என மத்திய அமைச்சர் கூறியது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, உதயநிதி ஸ்டாலின், “நாம என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்? தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் கேட்காமலேயே கொடுக்கிறீர்களே. தமிழ்நாட்டை மட்டும் ஏன் தனியாகப் பார்க்கிறீர்கள்” என காட்டமாக கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.