தமிழ்நாடு
மிக் ஜாம் புயலால் கொட்டிய கனமழை காரணமாக சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்ததால், தனது பாத யாத்திரையை ரத்து செய்துவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. இதனால் வரும் 16ஆம் திகதி அன்று மீண்டும் தனது நடைபயணத்தை வடமாவட்டங்களில் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை 28ஆம் திகதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை தென் மண்டலம், கொங்கு மண்டலம், மத்திய மண்டலம், டெல்டா மண்டலம் என 4 மண்டலங்களிலும் பாத யாத்திரையை நிறைவு செய்து இப்போது வடக்கு மண்டலத்தில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தேசியத் தலைமை.
மொத்தம் 168 நாட்களுக்கு பாத யாத்திரை திட்டம் வகுக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதல் நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. அண்ணாமலை பாதயாத்திரையை ஒருங்கிணைத்து வரும் அமர் பிரசாத் ரெட்டி கைது, அதிமுக பாஜக கூட்டணி பிளவு, அண்ணாமலைக்கு காய்ச்சல், மிக் ஜாம் புயல் என இடை இடையே பல காரணங்களால் யாத்திரை குறிப்பிட்ட திகதியில் இருந்து சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதனால் முன் திட்டமிட்டப்படி ஜனவரி 11ஆம் திகதி அன்று சென்னையில் பாதயாத்திரை நிறைவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான். பொங்கலுக்கு பிறகு கூடுதலாக 10 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு ஜனவரி 26ஆம் திகதிக்குள் யாத்திரை நிறைவடையலாம் எனத் தெரிகிறது.