மோசமான பாதுகாப்பு குளறுபடி; இனி இப்படி நடக்கவே கூடாது – நாடாளுமன்ற சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!
இந்தியா: தமிழ்நாடு
நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் மஞ்சள் நிற ஸ்பிரே அடித்தனர். அதோடு ஒருவர் லோக்சபா அரங்குக்குள் குதித்து சபாநாயகர் இருக்கை நோக்கி ஓடினார். இந்தச் சம்பவத்தால் அவையில் இருந்த எம்.பிக்கள் பயந்துபோயினர். அவர்கள் பாதுகாப்பு கருதி ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து பிற எம்.பிக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் ஒரு பெண், ஒரு ஆண் ஸ்பிரே அடித்து கோஷமிட்டனர். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது டெல்லி போலீசார் மற்றும் தீவிரவாத ஒழிப்பு படையை சேர்ந்தவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனநாயக கோவிலான பாராளுமன்றத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். இதுவரையில் இல்லாத வகையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குளறுபடி. இந்தச் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் மீது உடனே உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.