தமிழ்நாடு
தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் மிகவும் உடல் தளர்ந்த நிலையில், சக்கர நாற்காலியில் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்திடம் ஆசி பெற்று பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து பேசிய பிரேமலதா வரும் 2024 லோக்சபா தேர்தலில் தேமுதிக எம்.பி.க்கள் வெற்றி பெற்று டெல்லிக்கு செல்வது உறுதி என்று கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேமலதா தனது பணிகளை கட்சி அலுவலகத்திற்கு சென்று தொடங்கி விட்டார். இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் 2024ஆம் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றார். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.