தமிழ்நாடு
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு காட்டியதாக ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கி அந்த கட்சியின் பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
இந்த நிலையில் சென்னையில் தனது ஆதரவு மாநில நிர்வகாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ஓபிஎஸ், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம். கூட்டணி குறித்தும் அறிவிப்போம். அதிமுக வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும் என்றார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியிருப்பதாவது…
ஏற்கெனவே ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பொது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு ஒரு பலமும் இல்லை. இருந்த 4, 5 பேரும் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். எனவே ஓபிஎஸ் தன்னுடன் இருக்கும் மற்ற 4, 5 பேரை திருப்திப்படுத்த இப்படியெல்லாம் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலை ஓபிஎஸ்க்கு இருக்கு.
அவர் என்ன சொன்னாலும் அதிமுக தொண்டர்கள் இனி ஓபிஎஸ் சொல்வதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் கோவிலாக வணங்கக் கூடிய எம்ஜிஆர் மாளிகையை எட்டி உதைத்து, குண்டர்களை வைத்து ஆவணங்களை கொள்ளையடிக்க வைத்தார். கட்சி ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக எந்த அளவுக்கு பிரச்சினைகள் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு அவர் செய்துவிட்டார். வேதாளம் முருங்கைமரத்தில் ஏறுவது போல் அவ்வப்போது ஏறிவிடுவார். அதனால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அவரை பற்றி நாங்கள் பேசுவதில்லை, அவரை நாங்கள் பொருட்டாவும் மதிப்பதில்லை என அவர் தெரிவித்தார்.