தமிழ்நாடு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி விதிகளின் படி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26ம் திகதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியை அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைவரும் அழைப்பிதழ்களுடன் பங்கேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூட உள்ளது. நாளை காலை 10.35 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது, இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.