தேமுதிக தகவல் தொழில்நுட்ப அணிக்கு புத்துயிரூட்டும் பிரேமலதா விஜயகாந்த் – காலத்திற்கேற்ப கட்சியில் மாற்றம்..!!
தமிழ்நாடு
சமூக வலைதளங்களில் எதிரணியினருக்கு பதிலடிகள் கொடுக்கவும், கட்சியை புரோமோஷன் செய்யவும் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு அவசியம் என்பதால் அதன் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் அது அரசியலுக்கு ஒத்துவராது என்பது தான் உண்மை. இன்றைய அரசியல் சூழலில் விளம்பரங்கள், புரோமோஷன்கள் இல்லையென்றால் என்ன செய்தார் அவர், பேசினால் மட்டும் போதுமா என்ற கேள்வி எழும். இதனால் தான் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, கட்சிபணிகளை, செய்யும் நலத்திட்ட உதவிகளை எல்லோரும் பார்க்கும் வண்ணம் முகநூல், எக்ஸ், உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து விடுகிறார்கள்.
அந்த வகையில் அண்மையில் தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்தும் சமூக வலைதளப் பக்கங்களில் தனது கட்சி செயல்பாடுகள், மக்கள் சந்திப்பு பயணங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். அதோடு மட்டுமின்றி தேமுதிகவிற்கு புத்தெழுச்சி கொடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்தி புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் தான் அண்மையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை பார்வையிடச் சென்றவர் தகவல் தொழில்நுட்ப அணிக்கு மூலம் அந்த நிகழ்வை காட்சிப்படுத்திக் கொண்டார்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் இளைஞரணிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த நிலை மாறி இப்போது தகவல் தொழில் நுட்ப அணிக்கு தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் முன்னுரிமை அளித்து வருகிறது.