மோதலுக்கு நடுவே ஆளுநர் ஆர்என் ரவியை இன்று சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் – காரணம் இதுதான்…!!
தமிழ்நாடு
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு என்பது நீடித்து வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போடுவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தான் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராக ஆளுநர் ஆர்என் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான மனுவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வரும், ஆளுநரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது பாராட்டுதலுக்குரியதாக இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அந்த வகையில் இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச உள்ளார். நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளனர்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ள நிலையில் இருவரின் சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.