எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை; 15 லட்சம் பேர் கேப்டனுக்கு இறுதி அஞ்சலி – பிரேமலதா பெருமிதம்….!!
தமிழ்நாடு
விஜயகாந்த் உடல் நல்லடக்கம், முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்து முடிந்த பிறகு விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த அரசுக்கும், அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பிரேமலதா பேசுகையில், “இறுதிச் சடங்குக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவிய தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ராயல் சல்யூட். இரண்டு நாட்களாக எங்களுடன் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜிகே வாசன், அன்புமணி, அண்ணாமலை, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் பொதுப்பணித்துறைக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள், தேமுதிக தொண்டர்கள், கேப்டனின் ரசிகர்களுக்கும் நன்றி என உருக்கமாகப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம் கேப்டன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள புள்ளி விபரப்படி, கடந்த 2 நாட்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கேப்டனுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு உணர்வுப்பூர்வமான அன்பை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. கேப்டனின் அன்பும், கேப்டனின் தர்மமும், அவரது நல்ல எண்ணமும், அவரது உதவி செய்யும் குணமும் தான் இன்று ஒட்டுமொத்த மக்களும் தெருவில் வந்து நின்று அஞ்சலி செலுத்தியது எனத் தெரிவித்தார்.