LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வேலை வாய்ப்பு – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு நிபந்தனை..!!
இந்தியா: தமிழ்நாடு
பணியாளர்களில் 5% பேர் LGBTQ சமூகத்தினர் (தான்பாலீர்ப்பினர், இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பிற புதுமர்களை உள்ளடக்கிய சமூகம்) மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்கவும், தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும், விரிவாக்கம் செய்யவும், தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் Lighthouse project (Global FMCG) என்ற நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் தேர்வில் 5% சதவிகிதத்தினர் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தினராக இருக்க வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இத்தகைய நிபந்தனைகள் உலகிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக வைக்கப்பட்டு இருப்பதாக தொழிற்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.