இந்தியா: தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். சனாதனத்துக்கு ஆதரவாக பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திராவிட மாடல் ஆட்சியை முன்னிறுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது.
திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அந்த வகையில், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, ருத்ராட்சம், விபூதி பட்டையுடன் மத சின்ன அடையாளத்துடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டிருந்தார். அதில் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார் அண்ணாமலை.
காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையான நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவும் விவாதப்பொருளாகியுள்ளது.