தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போதெல்லாம் வெறும் ஹீரோவுடன் ஜோடி சேரும் நடிகையாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் ‘அன்னப்பூரணி’ படம் வெளியாகி இருந்தது.
அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கிய இப்படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து ‘அன்னபூரணி’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தில் பிராமண சமுதாயத்தில் பிறந்த பெண்ணாக வரும் நயன்தாராவுக்கு பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்பது கனவு. இதற்காக குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, வீட்டுக்கு தெரியாமல் அதற்கான படிப்பை படிக்கிறார். அப்போது காலேஜில் இறைச்சி சமைக்க வேண்டிய நிலை வரும் போது தயங்குகிறார்.
அந்த நேரத்தில் அவரது நண்பராக ஃபர்ஜான் கதாபாத்திரத்தில் வரும் ஜெய், ராமரும் இறைச்சி சாப்பிடுவார் என ஒரு வசனம் பேசுவார். அதனை தொடர்ந்து நயன்தாராவும் இறைச்சி சமைக்க ஆரம்பிப்பார். திரையரங்குகளில் வெளியான சமயத்தில் இந்த காட்சி மற்றும் வசனத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்தியில் ‘அன்னபூரணி’ படத்தை பார்த்த மும்பையை சார்ந்த சிலர் இந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மும்பையை சார்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலாங்கி ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக புகாரும் அளித்தார். இதனையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து இப்படம் நீக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காட்சிகளை எடிட் செய்து மீண்டும் படம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்ட படத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்வது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள இயக்குனர் வெற்றிமாறன், ‘சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குனர்களுக்கு கிடையாது. இது ott க்கும் பொருந்தும்.
ஆனால், தணிக்க குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தம் காரணமாக நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கு தணிக்க குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விகளுக்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளார். ‘அன்னபூரணி’ பட விவகாரம் தொடர்பாக தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரலாக வெற்றிமாறன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.