இந்தியா: தமிழ்நாடு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதை பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி வீடியோவில் பேசியிருப்பதாவது;
ஜாதி பேதங்கள் கடந்து நாம் அத்தனை பேரும் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாளே தை பொங்கல் திருநாள். மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளிலே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது.
கடந்த மாதம் சென்னையில் பெரும் மழையின் பாதிப்புகள்,அதே போலத் தென்மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மிகப் பெரிய வெள்ள பாதிப்புக்கு ஆளாகி அங்கே மக்கள் பட்ட பாட்டினை நாம் கண் கூடாகப் பார்த்தோம். இரண்டுமே காலநிலை மாற்றத்தால் வரக்கூடிய பாதிப்புகள் என்பதை நாம் உணரவேண்டும்.
இந்த பாதிப்புகளிலிருந்து எதிர்கால தலைமுறையை, நம்முடைய மக்களை நாம் பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அதே போல இதைப் பற்றி நமக்கு ஒரு விழிப்புணர்வு உருவாக வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக் கரத்தை நாம் நீட்ட வேண்டும். இந்த பொங்கல் திருநாளிலே நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தால் மக்கள் பட்ட துயரங்களை கண்கூடாக பார்த்த கனிமொழி, அது ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இப்படியொரு உறுதியை ஏற்றிருப்பதோடு அனைவரும் உதவிக்கரம் நீட்ட உறுதியேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.