”திருக்குறள், திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை” – எம்.பி. கனிமொழி பதிலடி..!!
இந்தியா: தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்நிலையில் திருவள்ளுவரை துறவி என கூறிய ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது. இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது.
இதை அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மதத்தை கடந்து மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திருவள்ளுவரின் நிறம். எனக்குத் தெரிந்து அடுத்த மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என்றார்.