உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக மின்சார கார்களை தயாரிக்கும் அவரது டெஸ்லா நிறுவனம் உலக புகழ்பெற்றது.
மின்சார கார்கள் மட்டுமின்றி டெஸ்லா நிறுவனம் ரோபோக்களையும் உருவாக்கி வருகிறது. இதற்கிடையே டெஸ்லாவின் மனித உருவிலான ரோபோவான ஆப்டிமஸின் புது வெர்ஷனை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ரோபோவுக்கு இருக்கும் திறன் பலரையும் அச்சப்பட வைக்கிறது.
அதாவது இந்த ரோபோவால் ஆடைகளை சுயமாகவே மடிக்க முடிகிறது. இது தொடர்பான வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோ நின்று கொண்டே கருப்பு டி-ஷர்ட்டை எந்தவொரு சிரமும் இல்லாமல் மடித்து வைக்கிறது.
தற்போது இருக்கும் ஆப்டிமஸ் வெர்ஷனால் தொடர்ச்சியாக சுயமாகச் செய்ய முடியாது என்ற போதிலும், வரும் காலத்தில் அனைத்து வேலைகளையும் சுயமாகச் செய்யும்படி வடிவமைக்கப்படும் என்கிறார் எலான் மஸ்க்.
இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. என்னடா சாதாரணமாகத் துணி மடிக்கறதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று நீங்கள் கேட்கலாம். துணிகளை மடிப்பது என்பது மனிதர்களுக்குச் சாதாரணமான வேலையாக இருக்கலாம். ஆனால் ரோபோ உலகில் இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம். இப்போது எலான் மஸ்க் சாதித்துள்ளது, சில வயதே ஆன குழந்தை துணிகளை மடிப்பதற்குச் சமமான ஒரு சாதனை.
இளைஞர்கள் பலரும் கூட இப்போது துணிகளை மடிக்கச் சிரமப்படும் நிலையில், இந்த ரோபோ கலக்கலாக இந்த வேலையைச் செய்கிறது. இந்த வீடியோ டெஸ்லாவின் புதுமையான மனித உருவ ரோபோவால் பல பயனர்களைக் கவர்ந்துள்ளது மற்றும் சிலர் இதை ஒரு மூலோபாய நடவடிக்கை என்று பாராட்டியுள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் எலான் மஸ்க் மற்றொரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில் ஒரு மனித உருவம் ஆப்டிமஸ் ரோபோ, நடப்பது, நடனம் ஆடுவது மற்றும் முட்டைகளை வேகவைப்பது போன்ற செயல்களைச் செய்தது குறிப்பிடத்தக்கது.