தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கலன்றும், பாலமேட்டில் நேற்றும் நடைபெற்றன.
இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கும், மாட்டு உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர்க அருண் விஜய், சூரி மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
விழா மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். இதனிடையே விழா மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நடிகர் அருண் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய் கூறியதாவது:
மிஷன் படத்தின் புரோமோசனுக்காக மதுரை வந்த இடத்தில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது. தமிழரின் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும்.
மாடுபிடி வீரரைப் போன்று ஒரு கதைக்களம் அமைந்தால் நிச்சயமாக டூப் இல்லாமல் நடிப்பேன். அது போன்ற கதைக்களம் அமைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. இவ்வாறு நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.