எம்ஜிஆர் பிறந்தநாளில் நடிகர் அரவிந்த் சாமிக்கு பேனர் வைத்த அதிமுகவினர் – மிரண்டுபோன நெட்டிசன்கள்..!!
இந்தியா: தமிழ்நாடு
கருத்து வேறுபாடுகளால் திமுகவில் இருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் கடந்த 1972இல் அதிமுகவைத் தொடங்கினார்.
அதன் பிறகு சில ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், மறையும் வரை முதல்வராகவே இருந்தார். அதிமுக இன்றும் வலுவான கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு எம்ஜிஆர் போட்ட அடித்தளமும் முக்கியமான காரணமாகும். இதன் காரணமாக எம்ஜிஆரை எப்போதும் அதிமுகவினர் கொண்டாடுவார்கள்.
இந்தாண்டு எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுக்க இருக்கும் எம்ஜிஆர் பிறந்த நாளுக்காகப் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் புகழை நினைவு கூரும் வகையில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் வைத்த பேனர் தான் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகள் பெயரும் இடம்பெற்றுள்ளன. சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107ஆவது பிறந்தநாள் விழா என்பது போன்ற வாசங்கள் இதில் உள்ளன.
இப்படி மற்ற அனைவரது பெயர்களும் போட்டோக்களும் சரியாக இருந்தாலும் கூட எம்ஜிஆர் படம் இதில் இல்லை என்பதே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது எம்ஜிஆர் படத்திற்குப் பதிலாக நடிகர் அரவிந்த் சாமி போட்டோவை அதிமுகவினர் இதில் போட்டுள்ளனர்.
அண்ணா படமும், ரியல் எம்ஜிஆர் படமும் சிறியதாக மேலே இருக்கிறது என்ற போதிலும் அரவிந்த் சாமி படமே அதில் பெரிதாகத் தெரிகிறது. சரி இந்த குழப்பத்திற்கு என்ன காரணம் எனக் கேட்கிறீர்களா.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி படத்தை இயக்கி இருந்தார். இதில் கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி இதில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்தப் படம் ஜெயலலிதா வாழ்க்கை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படம் வெளியான போது பலரும் அரவிந்த் சாமி நடிப்பைப் பாராட்டி இருந்தனர். அவர் அப்படியே எம்ஜிஆரை போலவே தெரிவதாகவும் எம்ஜிஆர் மேனரிசத்தை அப்படியே கொண்டு வந்ததாகவும் பலரும் பாராட்டினர்.
இப்போது அதே அரவிந்த் சாமியைத் தான் எம்ஜிஆர் என நினைத்து அதிமுகவினரே தங்கள் பேனரில் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எம்ஜிஆர் பிறந்தநாளுக்காக அரவிந்த் சாமி போட்டோவுடன் பேனர் வைத்துள்ளது இணையத்தில் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. எம்ஜிஆர் யார் என்றே தெரியாதவர்கள் கட்சியில் இருந்து என்ன பயன் என்ற அளவுக்கும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.