இந்தியா
Trending

தேர்தல் களத்தில் தீயசக்திகளை அகற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி சூளுரை..!!

இந்தியா: தமிழ்நாடு

தேர்தல் களத்தில் இருந்து தீயசக்திகளை அகற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது…

அண்ணாவின் இதயக்கனியான எம்ஜிஆர், அவர் பாதையிலேயே அரசியல் பயணம் தொடங்கி, அண்ணா கண்ட திமுக, ஆட்சியில் அமர அரசியல் புரட்சியை நடத்திக் காட்டினார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் எதிரிகள், துரோகிகளால் வீழ்த்த முடியாதபடி அவர் தொடங்கிய அதிமுகவை, அவரது தர்மம் காத்து நிற்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் பேருவகையோடு நோக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகமே வியக்கும் வகையில் 5-ம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். ஏழை மக்களின் குடில்களில் மின் விளக்குகள் எரிந்ததும் அவரது ஆட்சியில்தான்.

கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சகோதர, சகோதரிகள் 69 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு, எம்ஜிஆரின் 68 சதவீத இடஒதுக்கீடு முடிவுதான் காரணம். இதை அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இடம்பெறச் செய்து ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பெயர் பெற்றார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தை, ஜெயலலிதா காலத்துக்கு பிறகு, எதிரிகளும், துரோகிகளும் சூறையாட முனைந்த நேரத்தில், உங்கள் அனைவரின் துணையோடும் அவர்களை வீழ்த்தி, நாம் அனைவரும் அதிமுகவை கட்டிக் காத்து வருகிறோம்.

மின்கட்டணம், வீட்டுவரி, பால்விலை என சகலத்தையும் உயர்த்தி, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. முறையான திட்டங்களை வகுக்க முடியாமல், இயற்கை பேரிடர்களில் மக்களை காக்க முடியாமல், மக்களை அழிக்கும் அழிவு சக்தியாக திமுக அரசு மாறியுள்ளது.

எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை முன்னெடுக்கும் நிர்வாகிகள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். அத்துடன், பெருந்துயரால் பாதிக்கப்பட்டு ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு நிற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, எப்போதும்போல அதிமுக மக்களோடு நிற்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

எம்ஜிஆர் பிறந்தநாளில், தேர்தல் களத்தில் இருந்து தீயசக்திகளை அப்புறப்படுத்த நிர்வாகிகள், தொண்டர்கள் சூளுரைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button