மசூதியை இடித்து கோயில் கட்டியதை ஏத்துக்க முடியாது – அயோத்தி ராமர் கோவில் குறித்து உதயநிதி விமர்சனம்!
இந்தியா: தமிழ்நாடு
சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு வரும் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணாசாலையில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த சுடர் நாளை மறுநாள் மாநாடு நடைபெறும் இடத்தை சென்றடைய உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் இளைஞரணி மாநாட்டில் 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் 316 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும் என்றும் இறுதியாக அந்த சுடர் தலைவரிடம் கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு விலக்குக்கோரி 85 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மாநாட்டின்போது அவை திமுக தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பின்னர் நேரடியாக தானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரானது இல்லை என்றார். மேலும் அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.