இந்தியா: தமிழ்நாடு
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், மிக்ஜாம் பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட 1200 மீனவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முன்வந்தவர்கள் மீனவர்கள் தான். மீட்பு பணிகளில் மீனவர்கள் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் களத்தில் நின்றோம். உதவி கேட்காமலே உதவி செய்ய முன்வருபவர்கள் மீனவர்கள். ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் மக்களை மீட்டவர்கள் மீனவர்களே.
நேர்மையும் துணிச்சலும் தான் மீனவ மக்களிடம் எனக்கு பிடித்த விஷயம். நம்பி வந்தவர்களை தோளோடு தோள் நின்று காப்பவர்கள் தான் மீனவர்கள். இன்று மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் ஒடுக்க நினைத்த போது போராடிய மாணவர்களுக்கு துணை நின்றவர்கள் மீனவர்கள். ஜல்லிக்கட்டு உள்ளவரை மீனவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.
மீனவர்களின் வாழ்வாதாரமான படகே உடைந்தாலும் பரவாயில்லை என மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள், மழை வெள்ள பாதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அரசு தயார் செய்துவிடும். ஆனால் அதை மக்களிடம் சேர்த்தது மீனவர்கள். மழை வெள்ள பாதிப்பில் அரசுக்கு நற்பெயர் கிடைக்க காரணம் மீனவர்கள் தான்.
மீனவர்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திமுக. பல்வேறு மீனவர்கள் நல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்திருப்பதாக சுட்டிக்காட்டி பேசிய அவர், எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஒருவர் உயிரை மற்ற ஒருவர் காப்பாற்றுகிறாறோ அவர் தான் கடவுள். இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் மீனவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு, மீனவர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட் மீனவர்கள் கலந்து கொண்டனர்.