இந்தியா
Trending

அன்னையாகத்தான் இனி தன்னுடைய வாழ்வு இருக்கும் – விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அப்படியே மாறிய பிரேமலதா..!!

இந்தியா: தமிழ்நாடு

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி பிரபலங்களும் விஜயகாந்தின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் கட்சி தலைமையகமான தேமுதிக அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர். விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத பிரபலங்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவரது வீட்டிற்கு சென்று பிரேமலதா விஜயகாந்திடம் ஆறுதல் கூறி வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படத்தை, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா நேற்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் நினைவிடம் இந்த யுகம், இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கோயிலாகத்தான் இருக்கும் என்றார். மேலும் பலரும், மறைந்த விஜயகாந்தின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டீர்கள், உங்களது விருப்பப்படி, ட்ரஸ்டை அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன் என்றும் கூறினார்.

வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் ட்ரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்க வேலைகள் அன்றே ஆரம்பித்துவிட்டது என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி தன்னுடைய வாழ்வு இருக்கும் என்றும் கூறினார். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கேப்டனின் நினைவிடம் உள்ள இந்த இடம்தான் நம் கோவில் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும் இன்று தொடங்கும் இந்த அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தொடரும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நிறைவடைந்த போதே மீண்டும் கட்சியை உயிர் பெறச்செய்து விஜயகாந்தின் கனவை நனவாக்க வேண்டும் என சூளுரைத்தார் பிரமேலதா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button