
Shanu
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியின் உண்மை பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றியதாவது.
பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.அழுத்தங்களுக்கு நாங்கள் அடிபணிய போவதில்லை. அனைத்து விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படும்.
புதுக்கடை நீதிமன்றத்தில் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் கவலைக்குரியது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முறையான விசாரணைகளை மேற்கொண்டு இந்த சம்பவத்தின் பின்னணியை பகிரங்கமாக வெளிப்படுத்துவோம்.
கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது கலக்கமடைந்து தூய்மையானவர்களை போல் பேசுகிறார்கள். அரசாங்கத்தின் சட்டவொழுங்கினை கேள்விக்குள்ளாக்கும் தரப்பினர்களின் காலத்தில் தான் பல சம்பவங்கள் இடம்பெற்றன.
நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.அதேபோல் பொலிஸ் விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களின் உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்றார்.