
Shanu
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதார நிர்மால் குணரத்ன மற்றும் நலின் துஷ்ஷந்த ஆகிய இரு சந்தேக நபர்களும் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தடுப்புக்காவல் உத்தரவு முடிவடைந்த பின்னர் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் கோரியது. முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த பிரதான நீதவான், குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைபேசி சிம் அட்டையை பெற்றுக் கொள்வதற்கு இந்த சந்தேகநபர்கள் உதவியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்