இந்தியாஉலகம்

14 வயது சிறுமிக்கு 30 வயது நபருடன் திருமணம்: வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்கள்

Shanu

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலை கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவியது என்றும் இந்த விவகாரத்தில் போலீஸார் மூன்று பேரை கைது செய்துள்ளனர் என்றும் தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள மலை கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் (30) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலை கிராமத்தில் உள்ள மாதேஸின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

ஆனால், உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிக்கொண்டு சென்று மாதேஸின் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்த புகாரில் தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாயார் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button