108ஆவது பொன் அணிகளின் போர் : 52 வருடங்களின் பின்னர் வெற்றிகொள்ளுமா?:சென்.பெட்றிக் ஸ் யாழ்ப்பாணக் கல்லூரி..

Shanu
யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது பழைமைவாய்ந்த சென். பெட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகளின் போர் சென்.
பெட்றிக்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகிறது.இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தபோதிலும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டிருந்தது.
சென். பெட்றிக்ஸ் கல்லூரி இந்த வருடம் 175 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதை முன்னிட்டு முதல் தடவையாக பொன் அணிகளின் போர் மூன்று நாள் போட்டியாக நடத்தப்படவுள்ளது.இதன் காரணமாக இந்த வருடப் போட்டியில் முடிவு கிட்டும் என நம்பப்படுகிறது.
பொன் அணிகளின் போரில் கடந்த 52 வருடங்களாக வெற்றிபெறாமல் இருந்துவரும் யாழ்ப்பாணக் கல்லூரி இம்முறை வெற்றி தாகத்தை தீர்த்துக்கொள்ளும் எனவும் அதேவேளை தனது 175 வருடப் பூர்த்தியை சென். பெட்றிக்ஸ் கல்லூரி வெற்றியுடன் கொணடாட முயற்சிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணக் கல்லூரி கடைசியாக 1973ஆம் ஆண்டு எம். கணேசலிங்கம் தலைமையிலும் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 2023இல் எஸ். கீர்த்தன் தலைமையிலும் வெற்றிபெற்றிருந்தன.கடந்த வருடம் (2024) வரை இரண்டு – நாள் போட்டியாக நடத்தப்பட்டுவந்த பொன் அணிகளின் போரில் சென் பெட்றிக்ஸ் கல்லூரி 35 – 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.31 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஒரு போட்டி கைவிடப்பட்டது.
சென். பெட்றிக்ஸ் கல்லூரி அணிக்கு பற்குணம் மதுஷன் தலைவராகவும் யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு சிதம்பரலிங்கம் மதுஷன் தலைவராகவும் விளையாடுகின்றனர்.
இதேவேளை, இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 32ஆவது ராஜன் கதிர்காமர் கிண்ணத்துக்கான 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் இரண்டு கல்லூரி அணிகளும் பங்குபற்றும் அருட்தந்தை ஜீ. ஏ. பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் வெற்றிக் கிண்ணத்துக்கான 5ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளன.