சினிமா
Trending

பழம்பெரும் நடிகரும் இயக்குநருமான ரா சங்கரன் காலமானார்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரா சங்கரன். இயக்குநராகவும் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்துடன் வலம் வந்த ரா சங்கரன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவருக்கு வயது 92. இதனையடுத்து ரா சங்கரன் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

1974ம் ஆண்டு வெளியான ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா சங்கரன். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில் மீன், பெருமைக்குரியவள், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஆவதற்கு முன்னதாக அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

1962ல் வெளியான ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய ரா சங்கரன், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அமரன், சின்ன கவுண்டர், சதி லீலாவதி, காதல் கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

ரா சங்கரன் கடைசியாக 1999ம் ஆண்டு வெளியான அழகர்சாமி படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் பாரதிராஜா ரா சங்கரனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரா சங்கரனின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button