இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி ஆடுகளத்தை தயார்படுத்த ஆஸ்திரேலியரா - பின்னணி என்ன?

Shanu
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான பிட்சை தயார் செய்ததே ஆஸ்திரேலியர் ஒருவர் தான் என்ற தகவல் பரவி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த அரையிறுதி போட்டியில், துபாய் மைதான ஆடுகளத்தை தயாரிப்பது ஆஸ்திரேலியர் என்பது சிலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த கிரிக்கெட் அமைப்பு சிறந்த முறையில் கிரிக்கெட் மைதானங்களை பராமரித்து, உலகத் தரத்தில் வசதிகளை கொடுப்பதால் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை அங்கு நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், இந்திய அணி ஆடும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் மைதானங்கள் உலகின் பொதுவான மைதானங்களாகவே மாறிவிட்டது.
மேத்யூ சாண்டரி நீண்ட காலமாகவே துபாய் மைதானத்தில் தான் பணியாற்றி வருகிறார். அங்கு நடக்கும் உள்நாட்டு டி20 போட்டிகள், சர்வதேச போட்டிகள் என அனைத்திற்கும் அவரே பிட்ச்களை தயார் செய்கிறார். எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான அரையிறுதிக்கு மட்டுமே அவர் அங்கு பிட்சை தயார் செய்கிறார் என்பது போன்ற ஒரு தவறான எண்ணம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் அந்த மைதானத்தின் நீண்ட கால ஊழியர்.
மேத்யூ சாண்டரி ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக செயல்படுவாரா? என்பது போல சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானவை. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான அரையிறுதிக்கு என்ன மாதிரியான பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் ஊடகங்களிடம் பேசி இருக்கிறார் மேத்யூ சாண்டரி.வழக்கம்போல துபாய் மைதானத்தில் எவ்வாறு மெதுவான, சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் இருக்குமோ அதே போன்ற ஒரு பிட்ச் தான் அரையிறுதி போட்டிக்கும் தயாரிக்கப்பட்ட இருப்பதாக உறுதி செய்து இருக்கிறார்.
இந்த அரையிறுதிப் போட்டியில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான நிலை இருக்கும் என்பதால் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது மேலும் குறிப்பிடத்தக்க விடயம்